"ஒற்றைப்பனை மரம்" ஈழ மண்ணின் ஈரம் காயாத கதை..!

ஒற்றைப்பனை மரம்  ஈழ மண்ணின் ஈரம் காயாத கதை..!
X

ஒற்றைப்பனைமரம் -திரைப்பட போஸ்டர் 

போருக்கு பின்னர் இலங்கை தமிழர்களின் வாழ்வில் நடந்து வரும் போராட்டங்கள் தான் இந்த வாழ்க்கை.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரசு நடவடிக்கைகளால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’.

2009ல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணுவத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள்.

ஆனால், போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை. “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியது தானே” என முன்னாள் போராளிகளைச் சக மனிதர்கள் சிலர் கேட்கின்றனர். போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் உழலும் அப்பாவி கைம்பெண்கள் சிலரைப் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திப் பணிய வைக்கின்றனர்.

ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடித் தொழில் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஒரு சங்கத்தைக் கட்டமைக்க நினைக்கிறார் சுந்தரம். ஆனால், ‘வெள்ளை வேன்’ கொண்டு கடத்தி அரசத் தரப்பினர் அவரைச் சித்திரவதை செய்கின்றனர்.

இப்படிப்பட்ட வாழ்க்கையில் இந்த மூன்று முதன்மைக் கதாபாத்திரங்களின் நிலை எப்படிப்பட்ட அலைக்கழிப்புகளில் சிக்குகிறது, துணைக் கதாபாத்திரங்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியில் என்ன செய்கின்றன, அங்கே உரிமைகளுக்கான போராட்டக் குரல் ஓய்ந்து போய் விட்ட ஒன்றா என்பதை நோக்கி திரைக்கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

ஈழத்தில் உருவான ‘மண்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த புதியவன் ராசய்யா, எழுதி, இயக்கி, சுந்தரம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். தனி மனிதர்களையோ, தலைவர்களையோ, இலங்கை அரசையோ, ராணுவத்தையோ விமர்சிக்காமல் மௌன சாட்சியாகத் தனது நிலத்தின் தற்போதைய களநிலவரத்தின் ஒரு தரப்பைச் சுயவிமர்சனம் செய்யும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்.

இதில் விடுதலைப் புலிகள் எனக் குறிப்பிடாமல் ‘மேலிடம்’ என்று பதுங்கிப் பதுங்கி அவர்களைப் பல காட்சிகளில் விமர்சித்திருக்கிறார். புலம்பெயர்ந்துபோய் ஏதிலிகளாக உழைத்து, அதன் பயனாகச் செழுமையாக வாழும் இலங்கைத் தமிழர்களின் மீதான விமர்சனம் படத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. விளைவாக, இப்படம் ‘சிங்கள லாபி’யில் உருவானதோ என்கிற எண்ணத்தையும் உருவாக்குகிறது.

அதேநேரம், உரிமைக்கான குரலைக் கடைசி தமிழன் இருக்கும் வரை நசுக்கி விட முடியாது என்பதைச் சொன்ன இயக்குநரின் துணிச்சலைப் பாராட்டலாம். நடிகர்களின் அற்புதமான நடிப்பு, உருக்கும் இசை, இலங்கையில் கதை நடக்கும் பகுதிகளின் நிலப்பரப்பை விவரிக்கும் ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்ப ரீதியாகக் கவரும் இப்படம், தமிழகத் தமிழர்கள் காணவேண்டிய ஒன்று.

Tags

Next Story
Similar Posts
எனது வாழ்க்கையையே மாற்றிய அந்த ஒரு  திரைப்படம் நந்தா.. பாலாவை பற்றி நெகிழ்ந்த சூர்யா!
விடுதலை 2 இன்று முதல் திரையரங்கில்..!ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..முதல் பாகத்தையே மிஞ்சும் போலயே!
அந்நியன் மாதிரியே அட்டகாசமான ஒரு படம்.. ஆனா அங்கதான் டிவிஸ்ட்.
அல்லு அர்ஜூனுக்கு வந்த சோதனை..! மூளைச்சாவு அடைந்த 9 வயது சிறுவன்..!
2000ஆயிரம் கோடியை நெருங்கும் படம்..! மாஸ் காட்டும் கலெக்ஷன்!
Year End 2024 : ரீரிலீஸ்லயும் வெறித்தனம் காட்டிய திரைப்படங்கள்..!
மீண்டும் தொடங்கிய எதிர்நீச்சல்...! அசத்தில் புரோமோ!
AR Rahman Opt out from suriya 45
மாஸ் காட்டும் புஷ்பா..! அல்லு அர்ஜூன் எப்படி ஃபிட்டா இருக்காரு? 6 தடவ சாப்பிடுவாராம்..!
சவுந்தர்யாவின் அழகுக்கு காரணம் இந்த மூணும் தான்..! நீங்களும் டிரை பண்ணுங்க..!
விஜய் மாதிரி திடீர்னு வெயிட் போட்டீங்களா? அஜித் மாதிரி சிக்குன்னு ஆக சூப்பர் டிப்ஸ்..!
Weight Loss Tips In Tamil
நிறங்கள் மூன்று திரைவிமர்சனம் | Nirangal moondru review in tamil
ai in future agriculture