தைப் பொங்கல் திருநாள் குறித்த சிறப்புகள் - தெரிந்துக்கொள்வோம்!

Thai Pongal Specials- தை பொங்கல் திருநாள் மகத்துவம் அறிவோம் (கோப்பு படங்கள்)
Thai Pongal Specials- ஜனவரி மாதம் 15-ம் தேதி, தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள். இறைவனை நினைத்து, நோன்பிருந்து, இறை சிந்தனையில் மனதைச் செலுத்தியபின், பண்டிகைகள் துவங்கும் நாள் இது. இந்த காலத்திற்கு உத்தராயனம் என்று பெயர். உத்தர் என்ற வடமொழிச் சொல்லுக்கு வடக்கு என்று பொருள். அயனம் என்றால் வழி. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலம் உத்தராயனம். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் உத்தராயன புண்ணிய காலங்கள். இந்த ஆறு மாதங்கள் தேவர்களின் பகல் பொழுது.
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் காலம் தட்சிணாயனம். இவை ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்ற ஆறு மாதங்கள். இந்த ஆறு மாதங்கள் தேவர்களின் இரவுப் பொழுதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் உத்தராயன வாசல், தட்சிணாயன வாசல் என்று பெருமாளைத் தரிசிக்கச் செல்லும் சன்னதிக்கு இரண்டு வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி வரை, உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் நுழைந்து பெருமாளை சேவிக்க வேண்டும்.
தை மாத முதல் நாள் மகர சங்கராந்தி. சூரியன் ஒரு ராசியிலிருந்து, அடுத்த ராசிக்கு நகர்வதை சங்கராந்தி என்று சொல்வார்கள். இந்த நாளில், சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறான். ஆகவே, இந்த நாள் மகரசங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் மகர மாஸம் என்றும், தமிழில் தை மாதம் என்றும் குறிப்பிடுகிறோம். மகர ராசியை சூரியன் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு 29நாட்கள், 27.27 நாழிகைகள். தை மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும். இந்த வருடம் தை மாதம் 29 நாட்கள் கொண்டது.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி உண்டு. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்த மாதத்திற்கு மகாபாரதத்துடன் தொடர்பு உண்டு. மகாபாரதப் போரில், அர்ஜுனனின் அம்புகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தார் பீஷ்ம பிதாமகர். பீஷ்மர், அவருடைய தந்தையிடமிருந்து, தான் விரும்பும் நேரத்தில் உயிர் துறக்கும் வரனைப் பெற்றிருந்தார். தட்சிணாயன காலத்தில் இறந்தால் மறுபிறவி ஏற்படும் என்பதால், அவர் உத்தராயன வருகைக்காகக் காத்திருந்தார். உத்தராயனம் ஆரம்பித்த மகர சங்கராந்தியன்று அவர் மோட்சம் அடைந்தார். மகர சங்கராந்தியன்று உயிர் நீத்தவர்க்கு மறுபிறவி இல்லை. மோட்சம் அடைவர் என்று சொல்வார்கள். ஆகவே, தை பிறந்தால் மோட்சத்திற்கு வழி பிறக்கும்.
வயல் வெளிகளில் பயிர்கள், பாதையை மறைத்து வளர்ந்திருக்கும். அறுவடை முடிந்தவுடன், வயல் வெளிகளில் பாதை தெரியும். மேலும், நல்ல விளைச்சல் கண்டு, அறுவடை செய்ததை விற்று, தனக்கும் குடும்பத்திற்கும் வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நிலையை அடைகிறான் விவசாயி. இதன் காரணமாகவும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் கைகூட, இந்த பழமொழி உருவானது.
தை மாதத்தின் முக்கியமான பண்டிகை பொங்கல் என்ற அறுவடைத் திருநாள். இந்த நாள், இந்தியாவில் பல மாநிலங்களில் வெவ்வேறு பெயருடன் கொண்டாடப்படுகிறது. இயற்கையைப் போற்றும் இந்நாளில் சூரியன் இறைவனாக வணங்கப் படுகிறான். உழவுத் தொழிலுக்கு உதவி செய்த மாட்டிற்கு நன்றி செலுத்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ என்று அடுத்த நாளில் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 20, தை கிருத்திகை. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் கிருத்திகை நட்சத்திரம் கார்த்திகேயனுக்கு உகந்தது. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் முக்கியமாகக் கருதப்படுகிறது. உத்தராயன தை கிருத்திகை, கார்த்திகை மாத கிருத்திகை, தட்சிணாயன ஆடிக் கிருத்திகை. இந்த நாட்களில் முருகன் வழிபாடு திருமணத்தடையை நீக்கும், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஜனவரி 25-ம் தேதி தைப்பூசத் திருநாள். பௌர்ணமியோடு கூடிய பூச நட்சத்திரத்தில் சிவபெருமனையும், முருகனையும் வணங்குவது விசேஷம். குமரன் குடி கொண்டிருக்கும் கோவில்களில், முருகப் பெருமானுக்கு காவடி தூக்கி, நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள். தைப்பூசத் திருநாளில், வடலூரில், வள்ளலார் ஜோதி தரிசனம் காண்பதற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
தை அமாவாசை
பிப்ரவரி 9-ம் தேதி வருகின்ற தை அமாவாசை, பித்ரு தர்ப்பணம் என்று முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய நாள். அனைத்து மாதங்களிலும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் வருடத்தில் மூன்று முக்கிய அமாவாசைகளான தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டும்.
திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியவற்றை அருளிய திருமழிசை ஆழ்வார் பிறந்தது தைமாதம் மகம் நட்சத்திரத்தில். கலிக்கம்ப நாயனார் (ரேவதி), கண்ணப்ப நாயனார் (மிருகசீரிஷம்), அரிவாட்டநாயனார் (திருவாதிரை), சண்டேஸ்வர நாயனார் (உத்திரம்), திருநீலகண்டர் (விசாகம்), அப்பூதியடிகள் (சதயம்) ஆகிய நாயன்மார்கள் அவதரித்தது தை மாதத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu