கோபி அருகே டி.என்.பாளையத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு

மலைப்பாம்பை லாவகமாக பிடித்த வனத்துறையினர்.
கோபி அடுத்த டி.என்.பாளையத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டி.என்.பாளையம் வனச்சரக பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, மலைப்பாம்பு போன்றவை அதிகளவில் உள்ளன.
இந்த நிலையில், டி.என்.பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள முட்டியங்கிணறு பகுதியில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் அவர் தோட்டத்துக்கு சென்றார். அப்போது ஒரு மலைப்பாம்பு இரையை முழுங்கியவாறு மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுகுறித்து அவர் டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனவர் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் போட்டனர். இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, 'பிடிபட்டது 6 அடி நீள மலைப்பாம்பு ஆகும். இது அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து தோட்டத்துக்கு வந்துள்ளது' என்றனர்.
பின்னர் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை கொங்கர்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu