மத்திய அரசின் பார்லி. தொகுதி சீரமைப்பால் தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் * ராஜேஷ்குமார் எம்.பி., பேட்டி

மத்திய அரசின் பார்லி. தொகுதி சீரமைப்பால்  தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்  * ராஜேஷ்குமார் எம்.பி., பேட்டி
X

ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார்.

மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, பார்லி. தொகுதி மறு சீரமைப்பால் ஒட்டுமொத்த தென் மாநிலங்களும் பாதிக்கப்படும் என ராஜ்யசபா எம்பி., ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, பார்லி. தொகுதி மறு சீரமைப்பால் ஒட்டுமொத்த தென் மாநிலங்களும் பாதிக்கப்படும் என ராஜ்யசபா எம்பி., ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான, ராஜேஷ்குமார் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 50 ஆண்டுகளில் கல்வி, தொழில், தனிநபர் பொருளாதாரம், சமூக நீதி உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்று இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எந்த சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதோ, அந்த சமூகத்துக்கு அதனை வழங்கி உயர்த்திவிட்டது திமுக ஆட்சியில்தான். கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் அவர்களை உயர்த்தியதும், அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்து உயர்த்திவிட்டதும் திமுக ஆட்சியில்தான். தமிழக அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது. இலவச மின்சாரம், ஏழைகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக சிகிச்சை பெறும் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் போன்றவற்றை தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து தமிழக வளர்ச்சிக்கு வித்திட்டது திமுகதான்.

ஏற்கனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சித்தாந்தத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகம் மட்டுமல்லாமல், தென் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கும் துரோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால், நாட்டில் 848 மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்படும். இவை பெரும்பாலும் வட மாநிலத்துக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் உருவாகும். இதனால், 39 பார்லி. தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் 31 தொகுதிகளாக குறைக்கப்பட்டு நம் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும்.

இதேபோல கர்நாடகம், கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் போன்ற தென் மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்படும். இதனால் தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே வடமாநில பிரதிநிதிகள் ஆதரவுடன் மத்திய அரசு ஆட்சி அமைத்து அரசியலமைப்பு சட்டத்தை கூட மாற்றியமைக்கும் நிலை உருவாகும். கல்வி, வேலைவாய்ப்பில் உரிமைகள் மறுக்கப்படும். இதனைக் கருத்தில் கொண்டுதான் முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இதன் மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகம் முதல் குரல் கொடுத்துள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை கொண்டுவந்தது. இதை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தொகைக்கு ஏற்ப, பார்லி தொகுதி சீரமைப்பு என்பது, குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்களுக்கு எதிராக உள்ளது. அதை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு ஆதரவாக உள்ளது. இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறை இருக்கக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றார்.

Next Story