ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாட்டால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் : அறிவிப்பை வாபஸ் பெற கோரிக்கை

ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாட்டால் நகைக்கடன்    பெறுவதில் சிக்கல் : அறிவிப்பை வாபஸ் பெற கோரிக்கை
X

பைல் படம் 

பேங்குகளில் நகைக்கடன் வாங்கியவர்கள் அந்தக் கடனை புதுப்பிக்க, ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல்,

இந்தியா முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள், தங்களின் மருத்துவö செலவுக்காகவும், அவசரத்தேவைக்காகவும் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் அடகு வைத்து கடன் வாங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். குறிப்பாக விவசாயிகள் தங்கள் தேவைக்காக நகைகளை அடகு வைத்து மிகக்குறைந்த வட்டியில் கடன் பெறலாம். வங்கிகள் இதை முன்னுரிமை அடிப்படையில் வழங்கியதால் ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் தங்களின் அவசரத்தேவைகளுக்கு நகைக்கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தனியார் பைனான்ஸ் கம்பெனிகள் மற்றும் கந்து வட்டியால் ஏழைகள் பாதிக்கப்படுவது குறைந்து வந்தது. மேலும் ஒரு ஆண்டில் இந்த நகைக்கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், வங்கிகள் அபராத வட்டி விதிப்பார்கள். எனவே நகைக்கடன் பெற்றவர்கள் கடன் பெற்று ஒரு ஆண்டு முடிவடையும் தருவாயில், மீண்டும் கடன் தேவைப்பட்டால் வங்கிக்கு சென்று ஒரு ஆண்டிற்கான வட்டி தொகையை மட்டும் செலுத்துவார்கள். வங்கி அதிகாரிகள் நகைக்கடனை வட்டியுடன் வரவு வைத்து, மீண்டும் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து கடனை புதுப்பித்து வழங்குவார்கள். இதனால் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமலோ வட்டியை மட்டும் செலுத்தி, நகைக்கடனை புதுப்பித்துகொள்ளும் வசதி அனைவருக்கும் எளிதாக இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளில் நகை கடனுக்கு புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி நகைக்கடன் பெற்றவர்கள் மீண்டும் அந்தக்கடனை வட்டியை செலுத்தி புதுப்பித்துக்கொள்ள நினைத்தால், கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைøயை திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் மீண்டும் அந்த நகையைக் கொண்டுவந்து வங்கியில் அடகு வைத்து புதியதாக நகைக்கடன் பெற வேண்டும், என்ற நடைமுறையை ரிசர்வ் வங்கி இன்று ஏப். 2 முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு ஏழைகள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்பாக உள்ளது.

ரூ. 1 லட்சம் நகைக்கடன் பெற்றுள்ள ஒருவர் அதை புதுப்பிப்பதற்காக, கந்துவட்டிக்காரர்களிடம் சென்று ரூ. 1 லட்சத்தை அதிக வட்டிக்கு கடன் பெற்று, அதை வங்கியில் செலுத்தி, வங்கியில் இருந்து மீண்டும் ரூ. 1 லட்சம் கடன் பெற்று அதை வாங்கியவர்களிடம் கொடுக்க வேண்டும். இந்த திட்டம் கந்து வட்டிக்காரர்களுக்கு தான் உதவியாக இருக்கும். ஏழை, நடுத்தர மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போதே பட இடங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் கந்துவட்டி கும்பல்கள் நோட்டீஸ் அடித்து வங்கியில் வைத்துள்ள நகையை மீட்க, அவசர தேவைக்கு பணம் பெற எங்களிடம் வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கத் துவங்கி விட்டனர். எனவே நகைக்கடன் தொடர்பான புதிய சட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பழைய முறையிலேயே வங்கியில் நகை கடன் வழங்க வேண்டும். இது நாடு முழுவதும் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும். இல்லாவிடில் மீண்டும் கந்துவட்டி கொடுமைகள் தலைதூக்கும். எனவே இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக மறு அறிவிப்பை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story
ai healthcare products