சென்னிமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை, பக்தர்கள் ஓய்வு மண்டபங்கள் திறப்பு

Erode news- சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபத்தை அமைச்சர் சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை மற்றும் பக்தர்கள் ஓய்வு மண்டபங்களை அமைச்சர் சாமிநாதன் புதன்கிழமை (இன்று) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம் மற்றும் மலைக்கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபத்தை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம் மற்றும் தன்னார்வலர் பங்களிப்பில் (சக்தி மசாலா நிறுவனம்) ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மலைக்கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபம் என ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தலை முடி மழிக்கும் 11 பணியாளர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் சரவணன், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம். சிவக்குமார், சக்தி மசாலா நிறுவன நிர்வாகிகள் டாக்டர் துரைசாமி, சாந்தி துரைசாமி, பெருந்துறை வட்டாட்சியர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu