இறுதி ஊர்வலத்தில் சடலத்தை சுமந்து சென்ற திவிகவைச் சேர்ந்த பெண்கள்

மகேஸ்வரியின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பெண்கள் சுமந்து சென்றபோது எடுத்த படம்.
அம்மாபேட்டை அருகே உயிரிழந்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி மனைவியின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை பெண்கள் சுமந்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் நாத்திகஜோதி. இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 56) பெரியார் சிந்தனை உணர்வாளரான இவர் உடல்நலக்குறைவால் புதன்கிழமை (நேற்று) காலமானார்.
இந்த நிலையில், வழக்கமாக நடைபெறும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து, இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வழக்கமான இறுதி ஊர்வலத்தில் ஆண்களே முன்னின்று நடத்துவதோடு, பெண்களை சுடுகாடு வரை அனுமதிக்காமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள். இதற்கு மாறாக மகேஸ்வரியின் இறுதி ஊர்வலத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பெண்களே தலைமையேற்று நடத்தினர்.
இறந்தவரின் உடலைப் பெண்கள் சுமந்து முன்னே செல்ல, ஆண்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்துச் சென்றனர். உடல் தகனம் செய்யும் இடத்தில், அங்கு நடமாடும் தகன மேடை (எரிவாயு மூலம் பிணத்தை சாம்பலாக்கும் மேடை) தயார் நிலையில் வைத்திருந்தனர். பின்னர் இறுதி வணக்கம் செலுத்தி, உடலை தகனமேடையில் வைத்து எரியூட்டினர்.
எந்த நிகழ்விலும் ஆண், பெண் என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது என்ற பெரியார் கொள்கைப்படி, பெண்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்களை ஊர்வலத்திற்கு தலைமை ஏற்க வைத்து, அவர்கள் பின்னால் ஆண்கள் சென்றதாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர்.
இந்த இறுதி ஊர்வலத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu