/* */

மதுரையை மீண்டும் கைப்பற்றுவாரா சு. வெங்கடேசன்?

இதுவரை நடந்துள்ள மக்களவை தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா ஒருமுறை மட்டுமே வென்றுள்ள வினோத வரலாறும் மதுரை தொகுதிக்கு உண்டு

HIGHLIGHTS

மதுரையை மீண்டும் கைப்பற்றுவாரா சு. வெங்கடேசன்?
X

மதுரையில் போட்டியிடும் வேட்பாளர்கள் 

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், மதுரை மேற்கு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மதுரை மக்களவைத் தொகுதி. இங்கு முக்குலத்தோர் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அடுத்தடுத்த நிலைகளில் சௌராஷ்டிரா, நாயுடு, யாதவர், பட்டியலினத்தவர்கள், வெள்ளாளர் சமுதாயத்தினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். பாலசுப்பிரமணியன். 1952-ஆம் ஆண்டுமுதல் 2019 வரை நடைபெற்ற 17 தேர்தல்களில் இங்கு 8 முறை வெற்றி பெற்று, அதிக முறை வென்ற கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. அடுத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறை வென்றுள்ளது. திராவிட கட்சிகளான திமுக, அதிமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி ஆகியவை தலா ஒரு முறை வென்றுள்ளன.

இது வரை வென்றவர்கள்

1952 எஸ்.பாலசுப்ரமணியம் கொடிமங்கலம் காங்கிரஸ்

1957 கேடிகே தங்கமணி இந்திய கம்யூனிஸ்ட்

1962 என்எம்ஆர் சுப்பராமன் காங்கிரஸ்

1967 பி.ராமமூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

1971 ஆர்.வி.சுவாமிநாதன் காங்கிரஸ்

1977 ஆர்.வி.சுவாமிநாதன் காங்கிரஸ்

1980 ஏஜி சுப்புராமன் காங்கிரஸ்

1984 ஏஜி சுப்புராமன் காங்கிரஸ்

1989 ஏஜிஎஸ் ராம் பாபு காங்கிரஸ்

1991 ஏஜிஎஸ் ராம் பாபு தமிழ் மாநில காங்கிரஸ்

1996 ஏஜிஎஸ் ராம் பாபு தமிழ் மாநில காங்கிரஸ்

1998 சுப்பிரமணியன் சுவாமி ஜனதா கட்சி

1999 பி. மோகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

2004 பி. மோகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

2009 எம்.கே.அழகிரி திமுக

2014 ஆர்.கோபாலகிருஷ்ணன் அதிமுக

2019 எஸ். வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மதுரை மக்களவைத் தொகுதியில் 2004, 2014, 2019 என 3 மக்களவைத் தேர்தல்களில் மட்டுமே அதிமுக நேரடியாகக் களமிறங்கியது. 2014 தேர்தலில் மட்டுமே வென்றுள்ளது. தற்போது, 4-ஆவது முறையாக இந்தத் தொகுதியில் அதிமுக நேரடியாகக் களமிறங்கியுள்ளது.

மதுரையில் இதுவரை 13 தேர்தல்களில் களம் கண்டு, அதிக முறை நேரடியாகக் களம் கண்ட கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது 14-ஆவது முறையாக இங்கு போட்டியிடுகிறது. பாஜக. இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளது.

வாக்காளர்கள்

ஆண்கள் : 7,77,145

பெண்கள்: 8,04,928

மூன்றாம் பாலினத்தவர் : 198

மொத்த வாக்காளர்கள் :15,82,271

சட்டமன்ற தொகுதிவாரியாக

மேலூர் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 120013, பெண்கள் 122482, மூன்றாம் பாலினம் 10, மொத்தம் 242505

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆண்கள் 166536, பெண்கள் 173220, மூன்றாம் பாலினம் 63, மொத்தம் 339819

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி ஆண்கள் 120711, பெண்கள் 126558, மூன்றாம் பாலினம் 46, மொத்தம் 247315

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி ஆண்கள் 111171, பெண்கள் 114884, மூன்றாம் பாலினம் 50, மொத்தம் 226105

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி ஆண்கள் 109149, பெண்கள் 114071, மூன்றாம் பாலினம் 21, மொத்தம் 223241

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி ஆண்கள் 149565, பெண்கள் 153713, மூன்றாம் பாலினம் 8, மொத்தம் 303286

2019 தேர்தல் முடிவுகள்

சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்) - 4,47,075

வி.வி.ஆர். ராஜ் சத்யன் (அதிமுக) - 3,07,680

டேவிட் அண்ணாதுரை (அமமுக- சுயே) 85,747

எம்.அழகர் (மநீம) - 85,048

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர், குழலியல் செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். 2019-இல் இந்தத் தொகுதியில் அறிமுகமாகி, முதல் முயற்சியிலேயே அதிமுக வேட்பாளரைவிட 1.39 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர். மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுவது இவருக்கு மிகப் பெரிய பலம்.

அதிமுக வேட்பாளராக மருத்துவர் பா. சரவணன் போட்டியிடுகிறார். இவர், 2019-இல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் வென்றவர். மதுரையில் உள்ள பிரபல இருதய சிகிச்சை நிபுணர், பல்வேறு சமூகநலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்ற வகையில் தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல அறிமுகம் பெற்றவர்.

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியபோது, தனது பொருளாதார சக்திக்கு உள்பட்ட பொதுநலக் கோரிக்கைகளை தனது சொந்தச் செலவிலேயே நிறைவேற்றியவர் என்ற அறிமுகம் இவருக்கு சாதகம். மேலும், மக்கள் தன்னை எளிதில் அணுக வாய்ப்பளித்தவர் என்பதில் இவர் முதன்மை பெறுகிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இவருக்கு மிகப் பெரிய பலம்.

பாஜக வேட்பாளராக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ராம. சீனிவாசன் போட்டியிடுகிறார். நபார்டு வங்கியின் தனி நிலை இயக்குநரான இவர், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வரலாற்று ஆர்வலர், கட்டுரையாளர். காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கொங்கண் ரயில்வேயில் தனி இயக்குநராகப் பணியாற்றியவர். 2016-இல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைக் கொண்ட அமமுக கூட்டணியில் இருப்பது இவருக்கு சாதகம். கணிசமான அளவில் இருக்கும் சௌராஷ்டிர சமூகத்தினரின் ஆதரவும் இவருக்குக் கிடைக்கக் கூடும்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளார் து. சத்யா தேவி. முதுநிலைப் பட்டதாரியான இவர், மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாவர். தேர்தல் களத்துக்குப் புதியவர். சீமானின் பரப்புரையும், நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல் பணியும் இவருக்கு பலம்.

இந்தத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர், சுயேச்சை கள் என மொத்தம் 21 பேர் போட்டியிடுகின்றனர்.

2019 மக்களவைத் தேர்தலின் போது, மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுரை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியைத் தவிர மற்ற 5 தொகுதிகளிலும் அதிமுக 15 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருந்தது. இருப்பினும், 2021-இல் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மேலூர், மதுரை மேற்கு ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வென்றது. இது 2 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்ட மாற்றம்.

இதேபோல, கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட அமமுக இந்தத் தொகுதியில் 85,747 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 85,048 வாக்குகளையும் பெற்றன. தற்போது, மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியிலும், அமமுக பாஜக கூட்டணியிலும் இணைந்திருப்பது இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு வித்தியாசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Updated On: 7 April 2024 5:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு