/* */

தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய 13 ஏரிகள்

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 13 ஏரிகள் நிரம்பியுள்ள தாகவும், 37 ஏரிகள் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய  13 ஏரிகள்
X

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி, சுமார் 75 சதவீதம் நீர் நிரம்பிய நிலையில் உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 13 ஏரிகள் நிரம்பியுள்ளன. 37 ஏரிகள் நீர் வரத்து இல்லாமல் வறண்டு உள்ளன என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை சரபங்கா கோட்டத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 1,176.08 மில்லியன் கன அடியாகும். தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள ஏரிகளில் 413.17 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 79 ஏரிகளில், செருக்கலை ஏரி, இடும்பன் குளம் ஏரி, வேட்டாம்பாடி ஏரி, மின்னக்கல் ஏரி, சேமூர் ஏரி, பாலமேடு சின்ன ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, இலுப்பிலி ஏரி, மாணிக்கம்பாளையம் ஏரி, ஏமப்பள்ளி ஏரி, தேவனாம்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி ஏரி ஆகிய 13 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 79 ஏரிகளில் 2 ஏரிகள் 81 முதல் 90 சதம் வரை நீர் நிரம்பியுள்ளன. 3 ஏரிகளில் 71 முதல் 80 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன.

ஒரு ஏரியில் 51 முதல் 70 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. 7 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. 16 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதம் வரை நீர் உள்ளது. மொத்தம் 37 ஏரிகளில் சிறிதளவு கூட நீர் இல்லாமல் வறண்ட நிலையில், வானம் பார்த்த பூமியாய் உள்ளது என தெரிவித்துள்ளார்

Updated On: 2 Dec 2023 6:00 AM GMT

Related News