/* */

திரைக்கலைஞன் கமலின் மீண்டும் குணா..!

கமல்ஹாசன் நடித்த குணா படம் இப்பொழுது அனைவராலும் விவாதிக்கப்பட்டு வரும் ஹாட் டாபிக்.

HIGHLIGHTS

திரைக்கலைஞன் கமலின் மீண்டும் குணா..!
X

அப்போதைய கல்லுாரி மாணவர் ஒருவர் மெட்ராஸ் பையன் என்ற பெயரில் எழுதிய சுவாரஸ்யமான விஷயம் பற்றி பார்க்கலாம்.

ஒரிஜினல் படம் படுதோல்வி. அந்த படத்தை ஒரு காட்சியாக வைத்து எடுத்த படம் அமோக வெற்றி. என்றெல்லாம் பேசி வருகிறார்கள். குணா படம் பற்றி எப்பொழுது நினைத்தாலும் என்னுடைய கல்லூரி காலங்கள் தான் நினைவுக்கு வரும். சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வந்த நேரம்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தை நண்பர்களுடன் சென்று ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்து வயிறு குலுங்க சிரித்த நினைவுகள் எப்பொழுதும் வந்து செல்லும் இடைவேளையின் போது ஒரு குடிமகன் தன் நண்பரிடம் கேட்கிறான். இதில் மைக்கேல் யாருடா எனக்கு தூக்கி வாரி போட்டது. இடைவேளை வரை நான்கு கதாபாத்திரங்களில் ஒருவர் பெயரைக் கூட ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தரமான ரசிகர் கூட்டத்திற்குத் தான் கமல்ஹாசன் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று வேதனை அடைந்தேன்.

இந்த வேதனையை விட்டு வெளிவதற்குள்ளாகவே குணா படம் பற்றிய அறிவிப்பு வந்தது. மறுநாளே திரைஉலகம் பற்றி எரிந்தது. காரணம், படத்தை பற்றி விவரித்த கமல்ஹாசன் இது ஒரு வகையில் ஆர்ட் ஃபிலிம் என்று சொன்னார். அவ்வளவுதான் விநியோகஸ்தர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.

உங்களையெல்லாம் நம்பி பணத்தைப் போட்டு நாங்கள் படத்தை வாங்கினால் அதை ஓட விடாமல் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று அவர்கள் கமலஹாசனை கடித்து குதற, உடனடியாக கமலஹாசன் மறுப்பு தெரிவித்தார்.

இல்லை. இல்லை .இது கலைப்படமல்ல என்று அதை விளக்க முற்பட்டார். அதில் தோல்வி அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் தோல்வி அப்பொழுதே எழுதப்பட்டு விட்டது. தேவி திரைப்பட வளாகத்தில் அந்த படத்தை கால் கடுக்க வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்தேன். படம் காட்சிக்கு காட்சி மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் கமல்ஹாசன் செதுக்கியிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

கதையின் ஓட்டம் புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆனது. அபிராமி என்ற தன் அபிமான கடவுளையே மானசீக காதலியாக கமலஹாசன் கருதிக் கொள்ளும் அளவிற்கு மனநிலை வளர்ச்சி பெறாத நபர் என்ற விவரத்தை சராசரி இயக்குநர், படத்தில் பக்கத்து வீட்டுக்காரர் இன்னொருவருடன் சொல்வது போல் காட்சி அமைத்து ரசிகர்களுக்கு விளக்கி இருப்பார்கள். ஆனால் கமல்ஹாசனும் அன்றைக்கு சந்தான பாரதியோ, அல்லது பாலகுமாரனோ அனந்துவோ அப்படி நினைக்கவில்லை.

எங்கள் படத்தை புரிந்து கொள்ள எங்கள் அளவிற்கு நீங்களும் உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று ரசிகர்களை எதிர்பார்த்தது தான் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நான் பிரமித்து பார்த்தேன்.

எப்படி ஒரு கலைஞன் ஆங்கில படத்திற்கு இணையாக தரமாக தன் கதையை யோசித்துச் செல்கிறார் என்று. இது ஆங்கில படத்தின் தழுவல் என்று இப்பொழுது சொன்னாலும் அன்றைக்கு அந்த படத்தை ஆங்கில படத்தை விட சிறப்பாக கொண்டு சென்றிருக்கிறார் என்று தான் நான் சொல்வேன்.

இது போன்ற தரமான திரைப்படங்களை கொடுத்ததற்காக கமல்ஹாசனை என்றென்றும் நான் நன்றியுடன் பாராட்டுகிறேன். மன வளர்ச்சி குன்றிய ஒரு நபர் (இன்றைக்கு அவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லலாம்.) அனைவராலும் நேசிக்கப்படுகிறார் என்றெல்லாம் நாங்கள் நண்பர்கள் மத்தியில் விவாதித்து இருக்கிறோம் என்பது வேறு விஷயம்.

Updated On: 15 March 2024 5:31 AM GMT

Related News