/* */

காங்கயம் அருகே 11, 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருப்பூரை அடுத்த காங்கயம் அருகே கி.பி.11, 16- ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்த இரு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

காங்கயம் அருகே 11, 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
X

காங்கேயம் அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்துக்குள்பட்ட பரஞ்சோ்வழியில் உள்ள மகாதேவா் நட்டுராமந்தா் என்னும் மத்தியபுரீஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இரு கோயில்களிலும் திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநா் சு.ரவிகுமார், பொறியாளா் க.பொன்னுசாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு பழைமையான இரு கல்வெட்டுகளைக் கண்டறிந்தனா்.

இது தொடா்பாக ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமார் கூறுகையில், பண்டைய கொங்கு மண்டலத்துக்குள்பட்ட 24 நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.

இந்த நாட்டில் உள்ள பண்டைய 12 கிராமங்களில் பழஞ்சேபளி என்றும், பரஞ்சோ்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சோ்வழியும் ஒன்றாகும். இங்குள்ள மத்தியபுரீஸ்வரா் கோயிலின் அம்மன் சன்னிதி முன் மண்ணில் புதைந்திருந்த பெரிய தூண் கல்லை எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திரக் குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

220 செ.மீ உயரம், 50 செ.மீ அகலம், 20 செ.மீ கனம் கொண்ட பெரிய கல்லில் நான்கு பக்கங்களிலும் குறியீடுகளும், கிரந்த எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகளின் உயரம் 60 செ.மீ ஆகும்.

இந்த கிரந்த எழுத்துகளை வாசித்த இந்திய வரலாற்று பேராசிரியா் ஒய்.சுப்பராயலு, கல்வெட்டின் 4 பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற சொற்களே திரும்பத் திரும்ப வருகின்றன என்றார்.

பொதுவாக இவ்வகை மந்திரக் கல்லை வழிபடுவதால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோய் குணமாகும் என்பது நம்பிக்கையாகும். எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும்போது இது கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும்.

அதேபோல, வீரநாராயண பெருமாள் கோயிலில் புதைந்திருந்த ஒரு கல்லை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது அதில் 3 பக்கங்களிலும் தமிழ் எழுத்துகள் இருப்பதைக் காண முடிந்தது. 80 செ.மீ உயரம், 50 செ.மீ அகலம், 20 செ.மீ கனம் கொண்ட இந்தக் கல்லில் 3 பக்கங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகள் உள்ளன.

தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோயில்களிலும் இறைவனுக்கு மண்பானையிலேயே அமுது செய்து படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண் பானைகளை உருவாக்கும் குயவா்களை, வேட்கோவா், வேள்கோ என்றெல்லாம் நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தக் கல்வெட்டில் முதல் பக்கத்தில் 12 வரிகளும், இரண்டாம் பக்கத்தில் 9 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 4 வரிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் வேட்கோவா்களுக்கு வரி விதித்தது பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

அதாவது விளம்பி வருஷம் மாசி மாதம் 18-ஆம் நாள் ஸ்ரீ மன் கும்பள அண்ணார்கள் இப்பகுதியை திம்மராசன் ஆட்சியின் கீழ் அதிகாரம் செய்தபோது, பரஞ்சோ்பள்ளி வீர நாராயணப் பெருமாளுக்குத் திருநந்தா தீபம் எரிப்பதற்காகக் கூத்தார் சுங்கம் என்னும் வேட்கோவா் மண்பானை செய்யப் பயன்படும் ஒரு சக்கரத்துக்கு அன்று விதிக்கப்பட்ட வரிப்பணம் நான்கை சந்திரன் உள்ளவரை கொடுத்துள்ள செய்தியை அறிய முடிகிறது.

இதன் மூலம் அன்று மண்பானைத் தொழில் சிறப்புற்று இருந்ததும், அதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததையும் நாம் அறிய முடிகிறது. எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும் போது இது கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும் என்றார்.

Updated On: 24 Jan 2024 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?