/* */

செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே கல் குவாரிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

கல் குவாரிகளை அகற்றக்கோரி  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

செய்யாறு அருகே விதிமுறைகளை மீறி செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காகனம் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், காகனம் கிராமம் அருகே 4-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. இவ்வாறு செயல்படும் கல் குவாரிகளில் ஒன்று அரசு அனுமதி பெறாமலும், ஒரு கல் குவாரி உரிமம் தேதி நிறைவடைந்த பிறகும் செயல்படுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரிகளால் அப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்த நிலையில், போக்குவரத்துக்கு உகந்த நிலையில் இல்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. மேலும், கல் குவாரிகளால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே, இவ்வாறு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், குவாரிகளை அகற்றக் கோரியும் கிராம சபைக் கூட்டத்தில் பலமுறை தீா்மானம் நிறைவேற்றி அதன் நகல்கள் மாவட்ட ஆட்சியா், வெம்பாக்கம் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். இருப்பினும், அந்தக் கல் குவாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

மேலும், விதிமுறைகளை மீறி செயல்படும் கல் குவாரிகளை அகற்றாவிட்டால் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து இருந்தனா்.

இந்த நிலையில், காலை கிராம மக்கள் ஒருங்கிணைந்த போராட்டக் குழுவினா் கரந்தை - காகனம் சாலையில் உள்ள கூட்டுச் சாலைப் பகுதியில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கல் குவாரிகளை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த வெம்பாக்கம் வட்டாட்சியா் துளசிராமன், தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் மற்றும் போலீஸாா் சென்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது என்றும், தேர்தலுக்குப் பிறகு விதிமுறைகளை மீறி இயங்கும் கல் குவாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 28 March 2024 12:06 PM GMT

Related News